நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்.

உத்திரமேரூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-08-26 11:30 GMT

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி சாலை மறியல் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சொர்ணவாரி பருவத்தில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டது. கடந்த ஒரு மாத காலமாக பயிரிடப்பட்ட நெல்கள் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகள் இந்த முறையும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இதனை விற்பனை செய்து லாபம் பெறலாம் என்று எண்ணியிருந்தனர்.

ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த பருவத்தில் குறிப்பிட்ட அளவு பயிரிடப்பட்டதால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதில் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த தோட்டநாவல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சேரி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்சமயம் சொர்ணவாரி பருவம் அறுவடை செய்யப்பட்டு ஏராளமான விவசாயிகள் விளைந்த தங்களுடைய நெல்லை நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து கொட்டி உள்ளனர்.

ஆனால் இதுவரை இங்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது, இதுகுறித்து விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அருகே நெல்வாய் கூட்ரோட்டில் இருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது இதுவரை அதிகாரிகள் யாரும் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News