மகளிர் கல்லூரியில் சுய உதவிக் குழுவினரின் பொருட்கள் கண்காட்சி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2022-11-14 10:30 GMT

காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூர் பகுதியில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சுய உதவி குழுக்கள் கண்காட்சி தயாரிப்பு  பொருட்களை வாங்கிய  முதல்வர் வெங்கடேசன். உடன் மகளிர் திட்ட அலுவலர்கள்.

கல்லூரி மாணவர்களை தொழில் முனைவோர்களாக்கும் வகையில்‌ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுய உதவி குழுக்கள் உருவாக்கிய பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கடந்த 2012 –13 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊரக ஏழை மக்களுக்காக வலுவான மற்றும் துடிப்பான சமுதாயம் சார்ந்த அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை முறையாகப் பெற வழிவகை செய்து, குடும்ப வருமானத்தை பெருக்குவதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்.

மேலும் குழு உறுப்பினர்களிடையே சேமிப்பு பழக்கத்தையும், அவர்களுக்குள்ளேயே உள்கடன் வழங்குதலையும், ஒன்று கூடி ஒற்றுமையாகவும் மற்றும் ஜனநாயக ரீதியாகவும் முடிவெடுக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதும் சுய உதவிக் குழுக்களின் நோக்கங்களாகும்.

மகளிரின் பொருளாதார மற்றும் சமுதாய மேம்பாட்டினை உறுதிசெய்யும் பொருட்டு சுய உதவிக் குழுக்கள் முறையான கூட்டம் நடத்துதல், சேமித்தல், உள்கடன் வழங்குதல், கடன் திரும்ப செலுத்துதல், முறையான கணக்குப் பதிவேடுகள் பராமரித்தல் ஆகிய 5 கோட்பாடுகளை கடைப்பிடித்து சிறப்புடன் செயல்பட பயிற்சி வழங்கப்படுகிறது.

இவர்கள் செயல்பாட்டினை மற்றவர்களும் மேற்கொண்டு சுய தொழில் புரிந்து அதில் உற்பத்தி செய்யும் பொருட்களை மாவட்டம் முழுவதும் நடைபெறும் இடங்களுக்கு கண்காட்சிகள் வைத்து மற்றவர்களும் தொழில் முனைவோர்களாக ஆக்கும் முயற்சியை மாநில ஊரக வாழ்வாதார திட்ட மகளிர் திட்டம் செயல்பட்டுகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுய உதவி குழு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை கல்லூரி மாணவ மாணவிகள் முன் கண்காட்சிபடுத்தி அவர்களை தொழில் முனைவோர்களாக ஆக்க முன் முயற்சி எடுத்துள்ளது.

காஞ்சிபுரம் ஏனாத்தூர் பகுதியில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் சுமார் 2000 மாணவ மாணவிகள் கண்காட்சியை கண்டு அதில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இன்று நடைபெற்றது.

இக் கண்காட்சியினை மகளிர் திட்ட துணை இயக்குனர் அம்பிகாபதி , கல்லூரி முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் துவக்கி வைத்து மாணவ , மாணவியர்களுடன் பார்வையிட்டனர்.

கண்காட்சியில் உணவு பொருட்கள் , பொம்மைகள் , கைவினை பொருட்கள் , சத்தான உணவுக்கு தேவையான இயற்கை உணவு தயாரிப்பு உள்ளிட்ட பல  பொருட்களை சுய உதவி குழுவினர் காட்சிபடுத்தினர்.

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் நெமிலி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சுய உதவிக் குழு பட்டு நூலினால் தயாரித்த ஆடை ஆபரண பொருட்களான வளையல் , கம்மல் , அழகு கலை பொருட்கள் விற்பனைக்கு வைத்தது அனைவரையும் கவர்ந்தது

இன்று ஒருநாள் நடைபெறும் கண்காட்சியினை கல்லூரி மாணவ மாணவியர் பார்வையிட்டனர்.

இக்கண்காட்சியில் மகளிர் திட்ட உதவி இயக்குனர் மோகன் பாபு , திருமேனி மற்றும் மகளிர் திட்ட மாவட்ட விற்பனை & வழங்கல் மேலாளர் எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News