ஈரோடு ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாம் அமைக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை
ஈரோடு ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாம் அமைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாட்சா கோரிக்கை விடுத்துள்ளார்.;
ஈரோடு ரயில் நிலையத்தில் 5வது பிளாட்பாம் அமைக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சருக்கு தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாட்சா கோரிக்கை விடுத்துள்ளார்.
தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னாள் உறுப்பினர் பாட்சா, மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஸ்ரீ அஷ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு ரயில் நிலையத்தில் 4 பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. ஈரோடு மிக பெரிய தொழில் நகரமாகும்.
இங்கு ஜவுளி, மஞ்சள், சர்க்கரை ஆலை, பேப்பர் மில், பல் நோக்கு மருத்துவமனைகள், புனித யாத்திரைகளின் மையமாகவும். அதிக மக்கள் தொகை நகரமாகவும் உள்ளது. வியாபார விசயமாக உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். தினசரி ஈரோடு வழியாக 150க்கும் மேற்பட்ட ரயில்கள் நின்று புறப்பட்டு செல்கிறது.
நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்தும், சென்றும் கொண்டு இருக்கிறார்கள். இப்படி சிறப்பு வாய்ந்த ஈரோடு ரயில் நிலையத்தில் நான்கு பிளாட்பாரங்கள் மட்டுமே உள்ளது. தெற்கு ரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டி தருவது ஈரோடு ரயில் நிலையம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், ரயில்கள் பிளாட்பாரம் பற்றாக்குறையாக உள்ளதால் வரக்கூடிய ரயில்களை பிளாட்பாரம் வசதி இல்லாமல் ரயில்களை அவுட்டரில் நிற்க வைத்து காலதாமதமும், பயணிகளுக்கு இடையூறாகவும் உள்ளது. ஆகவே ஈரோட்டில் ஐந்தாவது பிளாட்பாரமும், நடைமேடையும் அமைத்து கொடுக்க வேண்டும்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ஈரோட்டிலிருந்து சென்னை வரை இயக்கப்படும் இந்த ரயில் ஒன்று தான் ஈரோட்டிலிருந்து இயக்கப்படுகிறது. இந்த வண்டி இரவு 9 மணிக்கு புறப்பட்டு விடியற்காலை 3.45 மணிக்கு சென்னை செல்கிறது. இதனால் அங்கு ஆட்டோ, டாக்ஸி, பஸ் வசதி, தங்குவதற்கு விடுதி வசதியும் இல்லாமல் சிரமப்படுகிறார்கள்.
ஆகவே, இந்த ரயிலை இரவு 10 மணிக்கு இயக்கினால் மிகவும் சௌகரியமாக இருக்கும். ஈரோட்டில் ரயில் ஏறுவதற்கு பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, சத்தி, காங்கயம் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் முன்கூட்டியே வர சூழ்நிலை உள்ளது. ஆகவே இந்த ரயிலை இரவு 10 மணிக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் தொற்றுநோய்களின் போது நிறுத்தப்பட்டது இதனால் கோவை திருப்பூர், ஈரோடு, மதுரை மாநகராட்சி நகர மக்கள், தூத்துக்குடிக்கு செல்ல சிரமப்படுகின்றனர். எனவே மேற்கண்ட மாநகர பயணிகளின் கருத்தில் கொண்டு கோவையில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு நேர ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.
பழங்கால ஆலயமான மகுடேஸ்வரர் கோயில் பிரபலமானது மாநிலம் முழுவதிலுமிருந்து மக்கள் இந்த கோயிலுக்கு வருவார்கள். எனவே அவர்களின் வசதிக்காக அந்த வழியாக செல்லும் ரயில்களை கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை சேலம் பாசஞ்சர் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்டது. இந்த ரெயிலை பொது மக்கள் வசதிக்காக இந்த ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.