ஈரோட்டில் போக்சோவில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி எஸ்பி அலுவலகத்தில் குவிந்த பெற்றோர்கள், மாணவர்கள்

ஈரோட்டில் போக்சோவில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி, எஸ்பி அலுவலகத்தில் பெற்றோர், மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-02-17 01:30 GMT

ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் திரண்ட பெற்றோர்களை படத்தில் காணலாம்.

ஈரோட்டில் போக்சோவில் கைதான ஆசிரியரை விடுதலை செய்யக்கோரி, எஸ்பி அலுவலகத்தில் பெற்றோர், மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 31). இவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவர் பணிபுரியும் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 17 வயது மாணவனுக்கு செல்போன் எண்ணுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த புகாரின்பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் அலாவுதீனை கைது செய்தனர். இந்த நிலையில் அவரிடம் 'டியூசன்' படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் ஈரோடு எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று ஒன்று திரண்டனர்.


இதுகுறித்த தகவல் கிடைத்ததும், அவர்களை போலீசார் நேரில் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, அவர்களிடம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது, ஆசிரியர் அலாவுதீன் எங்கள் பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 5 ஆண்டுகளுக்கும் மேலாக டியூசன் எடுக்கிறார்.

இதுபோன்ற பிரச்சினை இதுவரை இல்லை. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில் எங்களுடைய குழந்தைகளின் படிப்பு பாதிக்கும். எனவே கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும்' என்றனர்.

போலீஸார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து சிறிது நேரத்தில் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். ஆசிரியர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் எஸ்பி அலுவலகத்தில் திரண்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News