தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் இழப்பீட்டை மறுநாளே வழங்க வேண்டும்: ஈரோட்டில் எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தல்
தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் அதற்கான இழப்பீட்டை மறுநாளே வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.;
ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்எல்ஏ ஈஸ்வரன்.
தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் அதற்கான இழப்பீட்டை மறுநாளே வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் எம்எல்ஏ ஈஸ்வரன் வலியுறுத்தி உள்ளார்.
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆடுகளை கடித்துக் கொள்வதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே தெருநாய்கள் கடித்து ஆடுகள் இறந்தால் அதற்கான இழப்பீட்டை, மறுநாளே மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். யாரையாவது திட்டி வாக்கு சேகரிக்க முடியும் என்ற கருத்தை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முறியடித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆங்காங்கே குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே அரசு சட்டங்களையும், தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும். தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுத்துள்ள விவகாரம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரியவரும்.
தேர்தல் வியூகர் நியமிக்கப்படுவது கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமே தவிர, பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இருக்காது. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ அதிமுக மீது வைத்துள்ள விசுவாசம் என்பது யாருடனும் ஒப்பிட முடியாது.
கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் இல்லாததால் அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இது உள்கட்சி விவகாரம் என்பதால் அதில் வேறு எதுவும் கூற முடியாது. கள் இறக்க அனுமதி வேண்டி போராட்டம் நடத்தி 14 ஆயிரம் பேர் சிறை சென்றவர்கள் நாங்கள். கள்ளுக்கான தடையை நீக்கினால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.