தென்னை மரங்கள் அழிவால் ரூ.100-ஐ தொடும் தேங்காய் விலை : தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

'தென்னை மரங்கள் அழிவால் தேங்காய் விலை கிலோ, 100-ஐ தொடும்' என, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.;

Update: 2025-02-13 13:30 GMT

ஈரோடு: 'தென்னை மரங்கள் அழிவால், தேங்காய் விலை கிலோ,100-ஐ தொடும்' என, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மற்றும் வேளாண் துறைக்கு, அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நாடு சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தில், 50 லட்சத்துக்கும் குறைவான தென்னை மரங்களே இருந்தன. இன்று, 5 கோடிக்கும் மேலான தென்னை மரங்கள், நீலகிரி மாவட்டம் நீங்கலாக தமிழகம் முழுவதும் உள்ளன.

விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் தென்னையை நம்பியே உள்ளன. தென்னை பொருட்கள் ஏற்றுமதி மூலம், கணிசமான அளவு அந்நிய செலாவணியை ஈட்டி வருகிறோம்.

இன்று தேங்காய் விலை கூடிக் கொண்டே வருகிறது. ஒரு காய்க்கு விலை கூறிய நிலை மாறி, ஒரு கிலோ தேங்காய் 40 முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.

அதிலும் வெள்ளை ஈ, பஞ்சு அசுவனி தாக்குதலால், நாம் வாங்கி செல்லும் காயில் பல காய்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 'ஸ்லட்ஜ்' என்ற நத்தை தாக்குதலுக்கு, பல ஆயிரம் தென்னை மரங்கள் பாதித்துள்ளன.

கேரள வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய் தாக்குதலும் வேகமாக பரவுகிறது. இதனால், பென்சில் நுனி போல குருத்து சிறுத்து போகும் நோயும் பரவலாக காணப்படுகிறது.

குறிப்பாக கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இவ்வாறான நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் ஏராளமான மரங்கள் பட்டுப்போனது. தென்னந்தோப்புகள் முற்றிலுமாக அழிந்து வருவதை பார்க்கலாம்.

தேங்காய் விலை அதிகரிக்கும் அபாயம்

இதே நிலை நீடித்தால் காய் பிடிப்பு இன்றி, தேங்காய் வரத்தும், தேங்காய் அளவும் குறைந்து கிலோ 100 ரூபாய் என்ற விலையில் இன்னும், ஆறு மாதங்களுக்குள் உயர்ந்து விடும்.அரசு, வேளாண் துறை, வேளாண் பல்கலை கழகம் இதுபற்றி ஆய்வு செய்து, நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே நிலை நீடித்தால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் பாதித்து, வேறு பயிருக்கு மாறுவர், என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News