தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14-வது புதிய பேராயர் தேர்வு

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் 14-வது புதிய பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-12-07 14:37 GMT

புதிய பேராயராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிறிஸ்டியன் சாம்ராஜுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருச்சியை தலைமையிடமாக கொண்டு டி. இ. எல். சி. எனப்படும் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை இயங்கி வருகிறது. இந்த திருச்சபையின் 14 வது பேராயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திருச்சியில் இன்று தரங்கை வாசம் தூய கிறித்துவ பேராலயத்தில் நடைபெற்றது. பரிசுத்த திருவிருந்து ஆராதனையுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணையின்படி நியமிக்கப்பட்ட நிர்வாகஸ்தர் ஓய்வு பெற்ற ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் என். பால் வசந்தகுமார் மற்றும் தேர்தல் அதிகாரி என். ரத்தினராஜ் (ஓய்வு பெற்ற முதன்மை மாவட்ட நீதிபதி), நிதி மற்றும் சொத்து அதிகாரி ஜி. ஜெயச்சந்திரன் (ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர்) ஆகியோர் முன்னிலையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சிறப்பு சினோடு உறுப்பினர்கள் 419 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் மறைதிரு டாக்டர் ஏ. கிறிஸ்டியன் சாம்ராஜ் 14 -வது புதிய பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் பீளமேடு குருசேகர சபை குரு ஆவார். தேர்தலில் அவர் 398 வாக்குகள்  பெற்றிருந்தால் 14வது புதிய பேராயராக தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவருக்கு வருகிற 14-1-2023 அன்று தரங்கம்பாடி புது ஜெருசலேம் ஆலயத்தில் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது வெற்றி பெற்ற புதிய பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜிற்கு சபை மக்களும் தலைவர்களும் சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.

தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை சார்பில் திருச்சி மற்றும் தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இந்த திருச்சபை சார்பில் நடத்தப்படும் ஒரு நிறுவனம் ஆகும். இங்கு ஏழை எளிய மக்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தி  இலவச கண் அறுவை சிகிச்சைகளும், பல்வேறு சலுகைகளுடன் கூடிய சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News