தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும காரைக்காலிலும் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணிநேரத்தில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், நீலகிரி மாவட்டம் ஆதார் எஸ்டேட் பகுதிகளில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்(மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 2 நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
அடுத்த 5 நாட்களுக்கு, தமிழக உள்ள மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்றும் நாளையும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்கக்கூடும்.
மேலும் இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (மே7) நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.