கடலூர் அருகே கால்நடை மருந்தகத்தை அமைச்சர் துவக்கி வைத்தார்

கடலூர் அருகே புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை வேளாண்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

Update: 2022-01-17 18:06 GMT

கடலூர் அருகே புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவந்திபுரம் ஊராட்சியில் ரூபாய் 31.50 லட்சம் மதிப்பிலான புதிய கால்நடை மருத்துவமனை நிறுவப்பட்டது.

இன்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இதனை துவக்கி வைத்தார்.

இந்த புதிய கால்நடை மருத்துவமனை வாயிலாக திருவந்திபுரம், ஓட்டேரி, திருமாணிக்குழி, பில்லாலி, தொட்டி, குணமங்கலம், வரக்கால்பட்டு, மருதாடு, குமாரபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆடு மாடு கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கோமாரி நோய் தடுப்பூசி, சிகிச்சை, குடற்புழு நீக்க சிகிச்சை, செயற்கை முறையில் கருவூட்டல், மலடு நீக்கும் சிகிச்சை, சினைப் பரிசோதனை உள்ளிட்டவைகள் சிகிச்சை வசதிகள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை சுற்றுவட்டார பகுதி விவசாய பெருமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குனர், துணை இயக்குனர், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News