மக்களவை தேர்தல்: சிதம்பரம் தொகுதி ஒரு பார்வை!

இந்த தொகுதியில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை திமுக, 2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் மக்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-04-10 06:28 GMT

சிதம்பரம் தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி), புவனகிரி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இது தனி தொகுதியாகும்.

முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொகுதியில் 6 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை திமுக, 2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் மக்களவை  உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது. காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம் ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது.

அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள் உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது. தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

குன்னம் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 135340 , பெண்கள் 138423 , மூன்றாம் பாலினம் 1 , மொத்தம் 273764

அரியலூர் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 129901 , பெண்கள் 130278 , மூன்றாம் பாலினம் 6 , மொத்தம் 260185

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 128643 , பெண்கள் 129882 , மூன்றாம் பாலினம் 7 , மொத்தம் 258532

புவனகிரி சட்டமன்ற தொகுதி ஆண்கள் 124326 , பெண்கள் 126660 , மூன்றாம் பாலினம் 26 , மொத்தம் 251012

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 120473 , பெண்கள் 125032 , மூன்றாம் பாலினம் 33 , மொத்தம் 245538

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி ஆண்கள் 114960 , பெண்கள் 115843 , மூன்றாம் பாலினம் 13 , மொத்தம் 230816


தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ளார்.

தொடர்ந்து இம்முறையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார்.

தற்போதைய 2024 தேர்தலில் திமுக கூட்டணியில் தொல்.திருமாவளவனும், பாஜக சார்பில் கார்த்தியாயினி, அதிமுக சார்பில் சந்திரஹாசன் போட்டியிடுகிறார்கள்.

Tags:    

Similar News