கடலூர் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 9,492 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில், 3,184 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.

Update: 2022-03-13 04:43 GMT

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கடலூர் நீதிமன்றத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 

இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு சமரச அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

கடலூர் மாவட்ட தாலுகா நீதிமன்றங்களான பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் காட்டுமன்னார்கோவில் நீதிமன்றங்களிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 9,492 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 3184 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ. 26 கோடியே 41 லட்சத்து 25 ஆயிரத்து 332 வசூலிக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவஹர் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், தொழிலாளர் நல நீதிமன்ற தலைவர் சுபாஅன்புமணி, போக்சோ நீதிமன்ற நீதிபதி எழிலரசி, மகிளா நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் பாக்கியம் வரவேற்றார்.எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், முதன்மை சார்பு நீதிபதி பஷ்ஷீர், கூடுதல் சார்பு நீதிபதி-2 மோகன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி (நிலஎடுப்பு) ஜெனிபர், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 சிவபழனி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2 ஆர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-3 ரகோத்தமன், கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News