கொலை வழக்கு: கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷின் ஜாமீன் மனு கடலூர் கோர்ட்டில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

Update: 2021-10-23 14:58 GMT

கொலை செய்யப்பட்ட கோவிந்தராசுடன் கடலூர் தி.மு.க. எம்.பி. ரமேஷ் (கோப்பு படம்)

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இங்கு பணிபுரிந்த தொழிலாளி கோவிந்தராசு மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரை எம்.பி.யும் அவரது ஆட்களும் அடித்து கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து எம்.பி. ரமேஷ் உள்பட  ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றம்  செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில்  கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனை தொடர்ந்து இது  கொலை வழக்கமாக மாற்றம் செய்யப்பட்டது.

கோவிந்தராசுவை  கொலை செய்ததாக ரமேஷ் எம்.பி உள்பட  ஆறு பேரை போலீசார் தேடி வந்தனர். இதில் ஐந்து பேர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் ரமேஷ் கோர்ட்டில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவின்படி அவர் கடந்த  11ஆம் தேதி  கடலூர் கிளை சிறையில்  அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்   ரமேஷ் எம்.பி. தரப்பில் 20ம் தேதி தொடரப்பட்ட ஜாமீன் மனு இன்று மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி ஜவகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதி அதனை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கொலை வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் தி.மு.க. எம்பி ரமேஷ் தரப்பில் தொடரப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.


Tags:    

Similar News