கடலூர்: சத்துணவில் பல்லி- 2 குழந்தைகளுக்கு வாந்தி

கடலூர் மாவட்டத்தில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

Update: 2021-09-20 10:13 GMT

கடலூர் மாவட்டத்தில் சத்துணவில் கண்டெடுக்கப்பட்ட பல்லி.

கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் ஊராட்சி பூதங்கட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த 1-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அங்கு பயிலும்  குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு சென்று இன்று மதிய உணவை சாப்பிட்டுள்ளனர். பின்னர் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே உணவு பரிமாறிய ஊழியர்கள் சாப்பாட்டை பார்த்தபோது அதில் பல்லி விழுந்திருந்தது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அங்கன்வாடி மைய ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் வாந்தி மற்றும் மயக்கமடைந்த 2 குழந்தைகள் உட்பட உணவருந்திய 17 குழந்தைகளையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வருகிறது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம்,கோட்டாட்சியர் அதியமான் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்வையிட்டு, அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

குழந்தைகளின் நிலைகுறித்து மருத்துவமனையில் ஆய்வு செய்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  கலெக்டர் பாலசுப்பிரமணியம்  "குழந்தைகள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள்.‌ அபாயக் கட்டத்தில் யாருமில்லை. அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்தபின், எதனால் இவ்வாறு ஏற்பட்டது என்ற அறிக்கை அடிப்படையில் அங்கன்வாடி பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்," என்று‌ தெரிவித்தார்.

மேலும் அங்கன்வாடி மையத்தில் உணவு தரத்தை ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட‌ உணவில் சிறிய பல்லி இருந்ததை உறுதி செய்தனர்.

Similar News