கடலூர் மாநகராட்சியில் வித்தியாசமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்கள்.

கடலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர்.

Update: 2022-02-15 03:14 GMT

கொசு மருந்தை வீடுவீடாக தெருக்கள் முழுவதும் தெளித்து வாக்குகளை சேகரித்த திமுக வேட்பாளர் நடராஜன்.

தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சி 14 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி உள்ள 45 வார்டுகளில் திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட், மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 286 பேர் போட்டியிடுகின்றனர் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  தற்போது கடலூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சிகள் சார்ந்த மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள சூழலில் கடலூர் மாநகராட்சி பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்  வித்தியாசமான முறைகளில் வாக்காளர்களை கவரும் வண்ணத்தில் தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கடலூர் மாநகராட்சியின் 3வது வார்டில் திமுக சார்பில் பிரகாஷ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் வித்தியாசமான முறையில் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக, செம்மண்டலம் நான்குமுனை சந்திப்பில் காவல் துறையினரின் மேற்பார்வையில் கையில் திமுக சின்னம் ஏந்தி போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு தனக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்குகளை சேகரித்தார்.

கடலூர் 13வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் நடராஜன் என்பவர் நான் வெற்றி பெற்று வந்தால் உங்கள் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு காண்பேன் என வலியுறுத்தி முன்னதாகவே கொசு மருந்தை வீடுவீடாக தெருக்கள் முழுவதும் தெளித்து வாக்குகளை சேகரித்தார்.

மேலும், இதே போல் கடலூர் மாநகராட்சியின் 10 ஆவது வார்டு திமுக வேட்பாளர் ராஜமொகன் என்பவர், வார்டு பகுதியில் வாக்கு சேகரிப்பின்போது, அந்த பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் வாய்ப்பாடு புத்தகம் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் எனக் கூறி நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இவர் தான் தமிழகத்தில் அதிகம் படித்த மாநகராட்சி கவுன்சிலர் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News