கடலூர் கெடிலம் ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கடலூர் கம்மியம்பேட்டை சுடுகாடு அருகில் குப்பையை கொட்ட வந்த நகராட்சி குப்பை வாகனத்தை அப்பகுதி இளைஞர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு

Update: 2021-08-24 14:56 GMT

கெடிலம் ஆற்றங்கரையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

கடலூர் பெருநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு  சேகரிக்கும் குப்பைகளைக் கம்மியம்பேட்டை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது அங்கு குப்பை கிடங்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் தயார் செய்யாமல் கடலூர் நகரின் மையப்பகுதியில் உள்ள கம்மியம்பேட்டை சுடுகாடு அருகில் கெடிலம் ஆற்றின் கரையில் நகராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளைக் கொட்டுவதும், அதனைத் தீயிட்டு கொளுத்துவதும் வழக்கமாக வைத்து வருகின்றனர்.

சுடுகாடு எரி தகனமேடை பழுதாகி அதிலிருந்து வரும் புகையும், குப்பைகளை தரம் பிரிக்காமல் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக், உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒன்றாகக் கொட்டி அதனை எரிப்பதால் அதிலிருந்து வெளிவரும் புகையும் இந்தப் இப்பகுதி மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கி வருகிறது.

இந்த நிலையில் கடலூர் நகராட்சி மூலம் கம்மியம்பேட்டை பகுதியிலுள்ள கெடிலம் ஆற்றின் ஓரம் குப்பைகளை கொட்டிய போது இந்த பகுதி இளைஞர்கள் வாகனத்தை சிறை பிடித்து, நகராட்சி அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கம்மியம்பேட்டை குப்பை கிடங்கை சரி செய்தாக கூறி, கடலூர் நகர் மத்தியில் அமைந்துள்ள கம்மியம்பேட்டை சுடுகாட்டு பகுதியில் குப்பைகளை கொட்டுவதால்,  கூடிய விரைவில் அந்த இடம் குப்பை கிடங்காக மாறும் என்பதில் துளிகூட சந்தேகமில்லை.

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயமும், தரம் பிரிக்காமல் எரிக்கப்படும் குப்பையில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடும் அபாயமும் ஏற்படுகிறது. மக்கள் நலன் மீது அக்கறை இல்லாமல் செயல்படும் கடலூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? இந்தப் பிரச்சனை மீது அக்கறை காட்டுவாரா மாவட்ட கலெக்டர்?

Tags:    

Similar News