கடலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான திரையரங்குகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

சூர்யா படத்திற்கு பாமக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் போலீஸாரின் தீவிர பரிசோதனைக்கு பிறகே திரையரங்கில் ரசிகர்களுக்கு அனுமதி

Update: 2022-03-10 16:04 GMT

அச்சுறுத்தல் காரணமாக கடலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான திரையரங்கில் சோதனை செய்து உள்ளே அனுப்பிய போலீஸார்

நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் ,திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், மாற்று சமுதாயத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.  

சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அந்த திரைப்படம் வெளிவந்தது. இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவர் நடிக்கும் திரைப்படங்களை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று கடலூரில் சூர்யா ரசிகர்கள் படம் வெளியிடுவதை கொண்டாட பேனர், பேண்டு என தயார் செய்து இருந்த நிலையில் போலீசார் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தனர், இதன் காரணமாக எப்பொழுதும் கொண்டாட்டங்களுடன் காணப்படும் திரையரங்குகள் களையிழந்து காணப்பட்டன.

பின்னர் காலை 7 மணிக்கு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டன இதற்கு முன்னதாக இருந்த காவலர்கள் திரையரங்குகளில் கூடி இருந்த ரசிகர்களை வரிசை படுத்தி அவர்களின் பெயரை எழுதிக்கொண்டு, முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பட்ட பின்னரே படம்  திரையிடப்பட்டது.


Tags:    

Similar News