இல்லமே கல்விக்கூடம்; அலைபேசியே வகுப்பறை: கல்வியை புரட்டி போட்ட கொரோனா

கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளை கொரோனா முடக்கியதால், ஆன்லைன் கல்வியில் மூழ்கிய மாணவ-மாணவிகள்

Update: 2021-08-17 11:41 GMT

இல்லத்து திண்ணைகளில் நடக்கும் வகுப்பறை

 கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மீண்டும் பள்ளிகள் திறப்பது பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு 2020 ஆம் ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அனைத்து மாணவ மாணவிகளும் "ஆல்பாஸ்" என்ற நிலை ஏற்பட்டது.

தற்போது 2021 -2022 கல்வி ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் கடந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைனில் மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலையே தொடர்கிறது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் மாணவ -மாணவிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசும் கல்வி தொலைக்காட்சி மூலம் மாணவ மாணவிகளுக்கு பாடங்களை எடுத்து தொடர்ந்து கல்வி பயில வழி செய்து வருகிறது.

தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கியே உள்ளது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனை உணர்ந்த ஆசிரியர்கள் பலரும் மாணவ மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று பாடங்களை எடுத்து வருகின்றனர். மாணவ மாணவிகளின் கற்றல் திறனை அதிகரிக்க ஆசிரியர்களின் இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.

கடலூர் ஊராட்சி ஒன்றியம் களையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவர்களுக்கு கூரைவீட்டு திண்ணையில் பாடம் நடத்துகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாணவ மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் குழுக்களை ஏற்படுத்தி மாணவ மாணவிகளின் சந்தேகங்களையும் ஆசிரியர்கள் தீர்த்து வருகின்றனர்.வரும் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துறை சார்ந்த அதிகாரிகளோடு ஆலோசித்து வருவதாகவும், பள்ளிகள் திறப்பதற்கான முன்னற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்‌ தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Tags:    

Similar News