மாநகராட்சியாகும் கடலூர்: கலெக்டர் தலைமையில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம்

கடலூர் மாநகரட்சியாகவும், வடலூர், திட்டக்குடி நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-09-07 15:51 GMT

கலெக்டர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம்

கடலூர் நகராட்சி பகுதியை மாற்றி மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என பல வருடங்களாக கடலூர் மக்களும் அரசியல் பிரமுகர்களும் கோரிக்கையாக வைத்து வந்தனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பு கடலூர் நகர மக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 45 வார்டுகளை உள்ளடக்கிய கடலூர் நகராட்சி தற்போது மாநகராட்சி அறிவிக்கப்பட்டதால் ஊராட்சி பகுதியில் உள்ள 22 கிராமங்கள் இணைக்கப்பட உள்ளன.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இதில் ஊராட்சி நிர்வாகிகள், ஊராட்சி தலைவர்கள் , அனைத்து கட்சி சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொதுநல சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வெற்றிபெற்றவர்களின் பதவிக்காலம் தொடரும் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார். கடலூர் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட இதற்கு பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

ஊராட்சி பிரதிநிதிகளிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன, அப்போது 100 நாள் வேலை திட்டம் தொடர வேண்டும், ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதால் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவை உயர்த்தப்பட கூடாது என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அதேபோல கடலூர் மாவட்டத்தில் வடலூர், திட்டக்குடி பேரூராட்சிகள் நகராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன, வடலூர் பகுதியில் ஒரு சில கிராம பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. திட்டக்குடி பேருராட்சி தற்போதுள்ள 17-வார்டுகளை கொண்டு  நகராட்சியாக தரம் உயர்கிறது. 

பின் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி நிர்வாகிகளிடமும் , மக்களிடமும் கருத்துகளை கேட்டறிந்து ஒரு மாதத்திற்கு பிறகு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News