கடலூர் மாவட்ட கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீர் போராட்டம்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடலூர் மாவட்ட கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் திடீர் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-12-14 04:20 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கடலூர் மாவட்ட கலெக்டரை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

அப்போது கடலூர் மாவட்டம் காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டரை திடீரென முற்றுகையிட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற் பயிர்களின் புகைப்படங்களை கழுத்தில் மாட்டிக்கொண்டு மண் குவளையில் நாமமிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் எங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அந்த பயிர்களுக்கு நாங்கள் ஏற்கனவே பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்தோம். ஆனால் பயிர்கள் சேதமடைந்ததற்கு எங்களுக்கு இதுவரை காப்பீட்டு தொகை வழங்க வில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதிலையே வாடிக்கையாக தெரிவிக்கிறார் என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Tags:    

Similar News