கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் விளைநிலங்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

Update: 2021-11-23 12:20 GMT

மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் ராஜிவ் ஷர்மா அவர்கள் தலைமையிலான மத்திய குழுவினர் இன்று கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19-ந் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடி கடலூர் வங்க கடலில் சங்கமித்தது. 

ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட இடங்களில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருந்த குடியிருப்புகள், விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. சில கிராமங்கள் தீவுகளாகவே மாறியது. வாகன போக்குவரத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் 16 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், உளுந்து, மக்காச்சோளம் மற்றும் காய்கறி வகை பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 

பருவமழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் விரைந்த மத்திய குழுவினர் இன்று கடலூர் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

மத்திய அரசின் உள்துறை இணை செயலாளர் ராஜிவ் ஷர்மா அவர்கள் தலைமையிலான மத்திய குழுவினர், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியை ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை பகுதியில் கன மழையினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியனிடம் இந்த குழுவினர் விவரங்களை கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News