முந்திரி ஆலை தொழிலாளி உயிரிழந்த விவகாரம்: எம்.பி தலைமறைவு, 5 பேர் கைது

எம்பி உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிபிசிஐடி போலிசார் 5 பேரை கைது செய்தனர்.

Update: 2021-10-09 07:15 GMT

தலைமறைவான எம்.பி ரமேஷ் மற்றும் கொலைசெய்யப்பட்ட கோவிந்தராஜு .

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரி ஆலையில், அதே பகுதியில் இருந்து பணிபுரிந்து வந்த கோவிந்த ராஜூ என்பவர் செப்டம்பர் 19ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் கோவிந்த ராஜூவின் உடலில் காயம் இருப்பதை அறிந்து, அவரை நிறுவனத்தில் உள்ள பணியாளர்கள் சிலர் தாக்கியதால்தான் உயிரிழந்தார் எனக் கூறி, அவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து, அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

உயிரிழந்த கோவிந்தராசுவின் மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீஸார், எதிரிகளாக நிறுவன உரிமையாளரும் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதனிடையே இந்த வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்தார். இதுதொடர்பான விசாரணை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்றது. விசாரணையின்போது மக்களவை உறுப்பினரின் உதவியாளரான நடராஜன் மயக்கம் அடைந்ததை அடுத்து அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி போலிஸார் பதிவு செய்தனர். பின்னர் இச்சம்பவத்தில் தொடர்புடைய நடராஜன், கந்தவேலு, அல்லா பிச்சை, வினோத் மற்றும் சுந்தரராஜன் ஆகிய 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் கடலூர் மக்களவை உறுப்பினர் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரை தீவிரமாக தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News