'பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டம்'- அமைச்சர் நேரு

தமிழகத்தில் பயோமைனிங் முறையில் குப்பைகளை உரமாக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே. என். நேரு கூறினார்.

Update: 2022-01-05 04:44 GMT

கடலூர் நகரில் நடந்து வரும் திட்டப்பணிகள் தொடர்பாக  அமைச்சர் நேரு ஆய்வு நடத்தினார்.

கடலூர் மாநகராட்சி மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகள், கூட்டு குடிநீர் திட்டம், வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து  தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு கூறுகையில்

கடலூர் மாவட்டத்தில் 740 குடியிருப்புகளுக்கு தினம்தோறும் தண்ணீர் கொடுப்பதற்கு 179 சம்புகள் வழியாக 700க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள் மூலம் சுமார் 5 லட்சத்து 45 ஆயிரம் பேருக்கு தண்ணீர் கொடுக்கும் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது, மேலும் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சியில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக முதல்வரால் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அளிக்கப்பட்டு மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

பின்னர் கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டும் ஆற்றங்கரையில் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

தமிழகம் முழுவதும் அனைத்து பெருநகரங்களிலும் குப்பைகள் கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக இதற்கு மாற்றாக அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் பயோமைனிங் திட்டம் மூலம் உடனடியாக குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் எல்லாம் உரமாக மாற்றப்பட்டு வருகின்றன.இதேபோன்று கடலூரிலும் குப்பை கொட்டுவதற்கான இடம் இல்லாதது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் கடலூர் மாவட்டத்தில் மழை காலங்களில் உதவும் வகையில் நடைபெற்று வரும் வடிகால் திட்டம் 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள 40 சதவீத பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் கடலூரில் 18.4 ஏக்கர் பரப்பளவில் 36 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது, இதேபோல் கடலூர் மாவட்டத்தில் வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற உள்ளது என்றார். 

இறுதியாக கே. என். நேரு அருகில் இருந்த வேளாண்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகியோரிடம் நான்கு, நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் என பத்திரிகையாளர்களிடம் கூறினார். இது இது அந்த இடத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News