நெய்வேலி 3-வது சுரங்கம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு: கலெக்டரிடம் வாக்குவாதம்

என்.எல்.சி. 3-வது சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-25 16:15 GMT

கலெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இன்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக பேசி வந்தனர்.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே முதல் சுரங்கம் மற்றும் 2-வது சுரங்கம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு கொடுக்கப்பட்ட இடத்துக்கு போதுமான இழப்பீடு வழங்கவில்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு இதுவரை வேலையும் வழங்கவில்லை.

எனவே இனிவரும் எந்த சூழ்நிலையிலும் 3-வது சுரங்கம் அமைக்க உள்ள என்.எல்.சி. நிர்வாகத்திற்கு ஒரு சென்ட் நிலம் கூட தரமாட்டோம் என கூறி கலெக்டரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News