கோவை அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார்; பேராசிரியர்கள் போராட்டத்தால் பரபரப்பு

கோவை அரசு கலைக்கல்லுாரியில், உதவி பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டை மறைக்க, கல்லூரி முதல்வர் முயற்சிப்பதாக கூறி, பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-12 07:06 GMT

கோவை அரசு கலைக்கல்லுாரியில், பாலியல் புகாரில் சிக்கிய உதவி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை அரசு கலைக்கல்லுாரி, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ரமேஷ். சில மாதங்களுக்கு முன்பு, இதே கல்லுாரியில் பணிசெய்த பேராசிரியை ஒருவர், ரமேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து, உதவி பேராசிரியர் ரமேஷ், சிவகாசிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆனால், சில வாரங்களில், மீண்டும் கோவை அரசு கல்லூரியில் பணியில் இணைந்தார். பாலியல் புகார் குறித்து, ரமேஷ் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், இன்று நூறுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் பணியை புறக்கணிப்பு செய்து, கல்லுாரி முதல்வர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து தமிழ்நாடு கல்லுாரி ஆசிரியர் கழக தலைவர் வீரமணி தலைமையில், அரசு கல்லூரி வாயில் அருகே நின்று, உதவி பேராசிரியர் ரமேஷை காப்பாற்ற முயற்சிப்பதாக கல்லுாரி முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

 அப்பகுதியில் நின்ற மாணவிகள் நான்குபேர்,  உதவி பேராசிரியர் ரமேஷூக்கு ஆதரவாக, பேராசிரியர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

தகவலறிந்த மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் போராட்டத்தில் ஈடுபட்ட பேரசிரியர்களிடம் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டறிந்தார்.பின்னர் இது தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் குற்றச்சாட்டுக்குள்ளான உதவி பேராசிரியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Similar News