கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Coimbatore News- கோவையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-21 13:00 GMT

Coimbatore News- கோவையில் தொடர் கனமழை

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து சில தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெயில் குறைவாகவும், வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. பிற்பகல் முதல் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கனமழையும் தொடர்ச்சியாக பெய்து வருகிறது.

குறிப்பாக, கவுண்டம்பாளையம், பீளமேடு, அவினாசி சாலை, நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், காந்திபுரம், சுந்தராபுரம், பட்டணம், விளாங்குறிச்சி, சேரன்மாநகர், சிட்ரா, சிங்காநல்லூர், வெள்ளலூர், ராம்நகர், போத்தனூர் ஆகிய பகுதிகளிலும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, சூலூர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக லங்கா கார்னர், அவினாசி மேம்பாலம் ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் தண்னீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். லங்கா கார்னர் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டர் மூலம் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், டாக்டர் பாலசுந்தரம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News