வரும் 27ல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கோவை வருகை

Coimbatore News, Coimbatore News Today-பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை மறுதினம் (வரும் 27-ம் தேதி) கோவைக்கு வருகிறார். இதற்கான முன்னேற்பாடுகளை பாஜக வினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Update: 2022-12-25 09:01 GMT

Coimbatore News, Coimbatore News Today-பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா 

Coimbatore News, Coimbatore News Today-2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தயாராகி வருகின்றன. இதுதவிர மாநிலங்களில் எம்.பி தொகுதிகளை கைப்பற்ற மாநில கட்சிகளும் ஆயத்தமாகி வருகிறது.

மத்தியில் ஆளுகிற பாஜக, தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதற்கேற்ப, பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி  பெறுவதை இலக்காகி கொண்டு செயல்பட்டு வருகிறது. அதற்காகவே, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ஆளுகிற கட்சி திமுகவை சகட்டுமேனிக்கு விளாசி வருகிறார். எதிர்கட்சியான அதிமுகவை காட்டிலும், திமுகவை அதிகமாக விமர்சிப்பதும், குற்றச்சாட்டுகளை அடுக்குவதும் அண்ணாமலைதான். அதிமுக, திமுக கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள ஆர்வத்தை, அபிமானத்தை குறைத்துவிட்டாலே, பாஜக பக்கம், தமிழக மக்களின் கவனம் தானாகவே திரும்பிவிடும் என திட்டமிட்டு பாஜக செயல்படுகிறது.

அந்த வகையில் தமிழக பா.ஜ.க. தங்கள் பாராளுமன்ற தேர்தல் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவீச்சில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் 25 தொகுதிகளை கைப்பற்றுவதே இலக்கு என்ற நோக்குடன் பா.ஜ.க.வினர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக பா.ஜ.க.வினருடன் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வருகை தர உள்ளார்.

ஜே.பி.நட்டா வருகிற 27-ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கு அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்கின்றனர். ஜே.பி.நட்டா கோவை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காரமடைக்கு செல்கிறார். காரமடை வி.பி.ஆர். மஹாலில் பா.ஜ.க.வின் நீலகிரி, கோவை பாராளுமன்ற தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார். கூட்டத்தில் அவர், கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அப்போது பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது, தொகுதிகளில் பூத் கமிட்டியின் நிலை, மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறுவது என பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் பல்வேறு ஆலோசனைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்க உள்ளார்.

தேசிய பா.ஜ.க. தலைவர் கோவை வருவதால் கட்சியினரிடையே உற்சாகம் ஏற்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்கு தமிழக பா.ஜ.க.வினர் தயாராகி வருகிறார்கள்.

இதுகுறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா வருகிற 27-ம் தேதி கோவைக்கு வருகிறார். அவர் 2 நாள் தமிழகத்தில் தங்கி கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். இதற்கு முன்பு, கடந்த செப்டம்பர் மாதம் 2 நாள் பயணமாக ஜே.பி.நட்டா தமிழகம் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, மிக விரைவிலேயே அவர் மீண்டும் தமிழகம் வருவது, அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Tags:    

Similar News