மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டாம் என குறுஞ்செய்தி வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-18 15:27 GMT

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சுற்றுலாதலம் என்றாலே, சுருளிஅருவி, சின்ன சுருளி அருவி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி, அணைக்கரைப்பட்டி நீர் வீழ்ச்சி, போடி குரங்கனி, கொட்டகுடி, பெரியகுளம் சோத்துப்பாறை, வைகை அணை போன்ற இடங்கள் தான் முக்கியமானவை.

இந்த இடங்கள் எல்லாமே மலைப்பகுதிகளில் அமைந்துள்ளது. எந்த நேரமும் வெள்ள அபாயம் இப்பகுதிகளில் இருக்கும். தவிர வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் கண்ணீஸ்வரமுடையார் கோயில், காளாத்தீஸ்வரர் கோயில் முல்லையாற்றங்கரையில் அமைந்துள்ளன.

இந்த கோயில்களும் முக்கியமானவை. இங்கு தான் மக்கள் சுற்றுலா என்றாலே வருவார்கள். இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் தேனி மாவட்டத்தில் மிகவும் கனத்த மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகள், ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே மக்கள் சுற்றுலா தலங்களை தவிர்க்க வேண்டும். ஆறுகள், குளங்கள், கண்மாய்களில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இதனை செய்திக்குறிப்பாக வெளியிட்டிருந்த நிலையில், இன்று தேனி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மொபைல் போனில் குறுஞ்செய்தியாக மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்து மக்களை அறிவுறுத்தி உள்ளது.

மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறை நிர்வாகமும், தீயணைப்புத்துறையும், வருவாய்த்துறையும் மழைச் சேதங்களை தவிர்க்கவும், மழையால் உயிரிழப்புகளை தவிர்க்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விட்டன.

இதனை பொருட்படுத்தாமல் நீர் நிலைகளுக்கு அருகில் சென்று வெள்ளத்தில் சிக்கி பாதிப்பினை மக்கள் ஏற்படுத்திக் கொண்டு, பின்னர் அரசையோ, மாவட்ட நிர்வாகத்தையோ குறை சொல்லக்கூடாது என பொதுமக்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News