திருவொற்றியூரில் கார்த்திகை பௌர்ணமி: ஆதிபுரீஸ்வரர் வெள்ளிக்கவசம் திறப்பு

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமியை ஒட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக் கவசம் 3 நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும்

Update: 2022-12-07 11:30 GMT

சுவாமி அம்பாள்(பைல் படம்)

சென்னை திருவொற்றியூரில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு ஆதிபுரீஸ்வரர் வெள்ளிக்கவசம் திறப்பு வைபவத்தில்  ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் மீதான வெள்ளிக்கவசம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆதிபுரீஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.

தொண்டை மண்டல சிவதலங்கள் 32 திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் படம்பக்கநாதர் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரர் ஆண்டு முழுவதும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்ட நிலையில்தான் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமியை ஒட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக் கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும். இந்த ஆண்டும் கார்த்திகை பௌர்ணமியையொட்டி புதன்கிழமை மாலை 6 மணிக்கு கவசம் திறக்கப்பட்டு புணுகு சாம்பிராணி தைலம் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. புதன்கிழமை இரவு ஸ்ரீ தியாகராஜ சுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் திருவொற்றியூர் தேரடி பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது.

புதன், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாள்களும் பொதுமக்களின் தரிசனத்திற்கு திறந்து வைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு ஆதிபுரீஸ்வரர் திருமேனி  மீண்டும் வெள்ளிக் கவசத்தால் மூடப்படும்.

திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் கோயிலில் நடைபெறும் முக்கிய விழா நிகழ்ச்சிகளில் கவசம் திறப்பு நிகழ்ச்சியும் ஒன்று என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவாருவார்கள் என்பதால் நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் உதவி ஆணையர் எம்.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற கவசம் திறப்பு நிகழ்ச்சியில் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

சென்னை  திருவொற்றியூரில் தியாகராஜர் கோயில் அமைந்துள்ளது.இந்தக் கோயில் பல்லவ மன்னர்களால் 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதற்கு பிறகு 11-ஆம் நூற்றாண்டில் சோழர்களால் பெரிதாக புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவபெருமானின் விக்கிரகமும், திருவாரூர் தியாகராஜசுவாமி திருகோயிலில் உள்ள சிவன் சிலையும் ஓரே மாதிரியான தோற்றத்தை கொண்டவை.

இத்தலம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம். திருவொற்றியூர் கலிய நாயனாரின் அவதாரத் தலம். சுந்தரர் சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்த தலம். பட்டினத்தார் பலமுறை வந்ததும், அவர் முக்தி அடைந்ததும் இங்குதான்.இத்தல இறைவனான ஆதிபுரீஸ்வரர், ஒரு சுயம்பு புற்றுலிங்கம் ஆவார். ஆண்டில் கார்த்திகை பௌர்ணமி அன்று மாலை மட்டுமே வெள்ளிக் கவசம் திறக்கப்பட்டு அதற்கடுத்த இரு நாட்கள் மட்டுமே இவரை முழுமையாகத் தரிசனம் செய்ய இயலும்.அப்போது மட்டுமே இறைவனாருக்கு புணுகு சாம்பிராணி தைல அபிஷேகம் நடைபெறுவது விசேஷ நிகழ்வாகும்.

Tags:    

Similar News