அரியலூர் மாவட்ட அரசு பள்ளிகளில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்

அரியலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2022-02-28 11:17 GMT

அரியலூர் மாவட்டம்புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

புதுச்சாவடி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.சாந்தி தலைமை வகித்தார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் க.கண்ணதாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சர்.சி. வி ராமன் அறிவியல் கோட்பாடு, அவரது அறிவியல் ஆய்வுகள் பற்றி எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செங்குட்டுவன், பவானி , கவிதா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில், மின்சாரம் இல்லாத நீர் ஏற்றும் பம்பு, தானியங்கி விசிறி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, காடுகளின் முக்கியத்துவம் உள்ளிட்ட மாணவர்களின் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதேபோல், பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்து, மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் பேபி முரளிகிருஷ்ணன், பள்ளி துணை ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமலைச்செல்வி தலைமை வகித்து, அறிவியல் கண்காட்சியை தொடக்கி வைத்து பேசினார். 80 மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சி படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி அறிவியல் ஆசிரியர் சாந்தி செய்திருந்தார். கண்காட்சி நிறைவில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News