பொன்னேரிக்கு நீர் கொண்டுவர நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை

பொன்னேரிக்கு கால்வாய்கள் அமைத்து, நீர்கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் விவசாயிகள் குறைதீர்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

Update: 2021-11-27 06:45 GMT

குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளில் ஒருபகுதியினர். 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமையில்,  விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் சிலர் விடுத்த கோரிக்கைகள் வருமாறு:

அரியலூர் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் ச.செங்கமுத்து: அனைத்து விவசாய பொருட்களுக்கும் குறைந்தப்பட்ச ஆதார விலையை வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்தி, மிளகாய், காய்கறி பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு முறையாக இடுப்பொருட்களை வழங்க வேண்டும். 

காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் தங்க.தர்மராஜன்: தனியார் உரக்கடைகளில் யூரியா உரம் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கூட்டுறவு சங்கங்களின் கூடுதலாக யூரியா, பொட்டாஷ் போன்ற தேவையான உரங்களை இறக்குமதி செய்ய வேண்டும். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். 

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ.விசுவநாதன்: கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாமன்னர் ராசேந்திரன் சோழன் வெட்டிய பொன்னேரிக்கு, கால்வாய் அமைத்து, காவிரி நீர் கொண்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றுப்பாசன கோட்டத்திலுள்ள 29 ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி வழிவதால் வடிக்கால்களை தூர்வார வேண்டும். சுத்தமல்லி அணையை ஆழப்படுத்த வேண்டும். தூத்தூர்-வாழ்க்கை இடையே கொள்ளிடத்தின் குறுக்கே கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும். வாரணவாசி, முட்டுவாஞ்சேரி ஆகிய கிராமங்களில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர். 

Tags:    

Similar News