அரியலூரில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைத்தார்

காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

Update: 2021-10-02 06:20 GMT

தீபாவளி சிறப்பு விற்பனையினை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி

அரியலூர் புதிய மார்கெட் தெருவில் கதர் அங்காடி வளாகத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு விற்பனையினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தொடங்கி வைத்தார். இவ்விழாவில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார்.

தீபாவளி கதர் சிறப்பு முதல் விற்பனையை துவங்கி வைத்து பேசிய மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, கதர் ரகங்களை தயாரிப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. மக்களின் மனதை கவரும் வண்ணம் புதிய வடிவமைப்புகளில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினை இளைஞர்களால் புதிய உத்திகளுடன் தயாரிக்கப்படும் கவினை பொருட்களும் தமிழகத்தில் உள்ள கதர் அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

காதிகிராப்ட் கதர் விற்பனை நிலையத்தில் தரமிக்க கதர் வேஷ்டிகள், துண்டு ரகங்கள், ரெடிமேட் சட்டைகள், மெத்தை, தலையணைகள், பெட் ஷீட்கள், கண் கவரும் கதர் பட்டு ரகங்கள், கதர் பாலியஸ்டர் மற்றும் உல்லன் ரகங்கள் மற்றும் தேன், குளியல் சோப்புகள், சாம்பிராணி பூஜை பொருட்கள் பனைவெல்லம், பனை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகளின் உதவி பெறும் கதர், பட்டு மற்றும் பாலிவஸ்திரா ரகங்களுக்கு 30 சதவீதமும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்படுகிறது.

அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியத்தில் 10 சம தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் கதர் விற்பனை நிலையத்தின் மூலம் தீபாவளி சிறப்பு விற்பனை ரூ.20 இலட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசுத்துறை நிறுவனங்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கதர், பட்டு, பாலியஸ்டர், உல்லன் ரகங்கள் மற்றும் கிராம பொருட்கள் தள்ளுபடி விலையில் கொள்முதல் செய்து பயனடைவதுடன் இம்மாவட்டத்திற்கு நிர்ணயம் செய்யப்பட்ட விற்பனை குறியீட்டினை எய்திட ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக்குழுத்தலைவர் பு.செந்தமிழ்செல்வி, கோட்டாட்சியர் (பொ) ரவிசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் போ.சுருளிபிரபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)அ.பாரதி, அரியலூர் காதிகிராப்ட் மேலாளர் சு.முத்துப்பழனு மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News