அரியலூரில் பிறந்த இரட்டை குழந்தைகள் புதைப்பு : தாசில்தார் விசாரணை

அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை சுரங்க பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள் பிணமாக புதைக்கப்பட்டதை வட்டாச்சியர் முன்னிலையில் தோண்டி எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-23 13:15 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை சுரங்க பகுதியில் குறை பிரசவத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் இரட்டை குழந்தைகள் பிணமாக நேற்று கிடந்ததை அப்பகுதி கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து மர்மநபர்கள் அந்த குழந்தைகளை அதே இடத்தில் குழிதோண்டி புதைத்து போட்டோ எடுத்து வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

இது குறித்து தகவல் அறித்த தளவாய் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி ராயர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் செந்துறை வட்டாச்சியர் முன்னிலையில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டை சிசுக்களின் உடலை மனிதாபிமானம் இன்றி ரகசியமாக வீசி சென்ற பெண் யார், கள்ளக்காதல் காரணமாக உருவான குழந்தையை கருக்கலைப்பு செய்து வீசிச் சென்றார்களா என்றும், குழந்தையை புதைத்தவர்கள் யார் என்றும் தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News