அரியலூர் நகரில் பொருட்கள் வாங்க திருவிழா போல் மக்கள் கூடியதால் கொரோனா பரவும் அச்சம்

அரியலூர் நகரில் திருவிழா கூட்டம் போல் சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை வாங்க கூடிய கூட்டத்தால், அரசின் நோக்கம் சிதைந்து கிராமப்புறங்களில் அதிகம் கொரோனா பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2021-05-23 14:56 GMT

அரியலூரில்  கொரேனாவை விலைக்கு வாங்க திருவிழாப் போல கூடிய கூட்டம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை உத்தரவை பிறப்பித்தும் வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

இதனை அடுத்து நாளை முதல் தளர்வுகள் இல்லா ஊரடங்கை ஏழு நாட்களுக்கு அமல்படுத்தி தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இன்று இரவு 9 மணி வரை அனைத்து கடைகளை திறக்கவும் பேருந்துகளை இயக்கவும் உத்தரவிட்டிருந்தது.

அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஞாயிற்றுக் கிழமையான இன்று தங்களுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்களை வாங்க கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் திருவிழா கூட்டம் போல் அரியலூர் நகரில் குவிந்தனர்.

கடைவீதி, காய்கறி மார்க்கெட், உள்ளிட்ட பகுதிகளில் தங்களுக்கு பொருட்கள் வாங்க சமூக இடைவெளி இல்லாமல் ஒரே இடத்தில் பொதுமக்கள் கூடினர். இதனால் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகளவில் கைகளில் பைகளை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றதால் இன்று ஒரே நாளில் ஒரு நோய் தொற்று அதிகம் பரவக் கூடிய சூழ்நிலை உள்ளது.

இதன் மூலம் நகரிலுள்ள கடை வியாபாரிகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுவதோடு கிராமப்புறங்களுக்கு செல்லும் பொது மக்களும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பொது மக்களிடையே சமூக இடைவெளி என்பது இல்லை. இதனால் அரியலூர் மாவட்டத்தில் கிராம பகுதியிலும் வைரஸ் தொற்று அதிகம்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்த உள்ளதோ, அந்த நோக்கம் இன்று ஒரு நாள் பொதுமக்கள் கூடியதால் நிறைவேறுமா என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News