நகர்ப்புற தேர்தலை நேர்மையாக நடத்திட அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்

நகர்ப்புற தேர்தலை நேர்மையாக நடத்திட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு நல்க மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2022-01-30 17:46 GMT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரியலூர் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் சாதாரண தேர்தலுக்கான அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்து பேசுகையில், மாநில தேர்தல் ஆணையம் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தலை அறிவித்துள்ளது. அதனடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் அட்டவணையின்படி, வேட்பு மனு தாக்கல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்பு போன்ற தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரியலூர் நகராட்சியில் 18, ஜெயங்கொண்டம் நகராட்சி 21 என 39 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் தலா15 என 30 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.

இதற்காக அரியலூர் நகராட்சியில் 34 வாக்குச்சாவடிகளும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 38 வாக்குச்சாவடிகளும், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் தலா 15 வாக்குச்சாவடிகளும் என 102 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் தவிர அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன், 20 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, நேரடி ஒளிபரப்பாக வெப் ஸ்டிரீமிங் முறையில் வாக்குப்பதிவின்போது, கண்காணிப்பு பணி மேற்கொள்ள நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மேலும்,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04329-228902 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகு மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News