அரியலூர்: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-11-12 12:08 GMT

கடந்த 2017ம் ஆண்டு,  அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த அன்பு என்பவர்,  பரணம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை,  திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைக் கூறி,  பாலியல் பலாத்காரம் செய்தததாக,  பாதிக்கப்பட்ட சிறுமி ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில், வாலிபர் அன்புவை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு,  அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த அன்பு என்பவருக்கு,  சட்டப்பிரிவு 376க்கு, 10ஆண்டுகள், சட்டப்பிரிவு 417க்கு 10ஆண்டுகள், 478க்கு ஒருஆண்டு சிறைத்தண்டனையும், இந்த தண்டனைகள் அனைத்தையும் ஏககாலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பளித்தார். மேலும் 16 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் இருபிரிவுகளுக்கும் தலா ஆறுமாத சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்று சட்டப்பிரிவு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க உத்திரவிட்டுள்ளதால் தண்டனைக்காலம் 10ஆண்டுகள் சிறைத்தண்டனை என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அன்புவை, போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News