ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

சென்னையில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-06-06 07:10 GMT

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி.

ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் சென்னை  வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்  2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றியவர் மலர்விழி ஐஏஎஸ். தற்போது இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார்.

இவர் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றியபோது கிராம ஊராட்சிகள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களுக்கு வழங்கக்கூடிய ரசீது புத்தகங்களை அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனத்திடம் வாங்கியதாக புகார் எழுந்தது.

தருமபுரி மாவட்ட அச்சகத்தில் 40 ரூபாய்க்கு கிடைக்கும் ரசீது புத்தகங்களை, தனியார் நிறுவனத்திடம் 135 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், அரசுக்கு ஒரு கோடி 31 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ரசீது புத்தகங்களை கமிஷன் பெற்றுக் கொண்டு வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் தாஹீர் உசைன், பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்வழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காகாடு கிராமத்தில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் பழனிவேலுக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. முந்தைய அ.தி.மு.க.ஆட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு ரசீது புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்கள், ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை வாங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News