கதித்தமலை முருகன் கோவில்; தைப்பூசத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Kathithamalai-திருப்பூரை அடுத்துள்ள ஊத்துக்குளி, கதித்தமலை முருகன் கோவில், தைப்பூசத் தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.

Update: 2023-01-28 12:40 GMT

Kathithamalai

Kathithamalai-திருப்பூரை அடுத்துள்ள ஊத்துக்குளி, கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில், தைப்பூச தேர்த் திருவிழா இன்று கதித்தமலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஊத்துக்குளியில் மிகவும் பிரசித்தி பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் அமைந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் தலங்களில், இந்த கோவிலும் பிரசித்த பெற்ற ஒன்றாக விளங்குகிறது. மாதந்தோறும் சஷ்டி, கிருத்திகை நாட்களிலும், முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும், சித்திரை மற்றும் தை மாத சிறப்பு நாட்களிலும் இந்த கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆண்டுதோறும் இக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச தேர் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக கதித்தமலையில் கொடியேற்றம் இன்று காலை, நடைபெற்றது. அங்கு கூடியிருந்த பக்தர்கள், அரோகரா, அரோகரா கோஷம் முழங்க, கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) காலை கணபதி ஹோமம், கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலைக்கோவிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து மாலையில்,  சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று முதல், பிப்ரவரி மாதம் 3-ம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். அடுத்த மாதம் 1-ம் தேதி மாலை, சுவாமி மயில்வாகன காட்சி உலா நடைபெறும். பிப்ரவரி மாதம் 4-ம் தேதி காலை சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறும். 5-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும், காலை 6.30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு மேல் திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

பிப்ரவரி 6-ம் தேதி பரிவேட்டை நடைபெறும். 7-ம் தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சுவாமி உலா காட்சி நடைபெறும். பிப்ரவரி மாதம் 8-ம் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சுவாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

அன்று இரவு மஹா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். பிப்ரவரி மாதம் 9-ம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா உடன் தைப்பூச தேர்த் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News