குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?

இந்த குருபெயர்ச்சி காரணமாக உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். பணவரவு சீராக இருக்கும்

Update: 2024-05-01 05:08 GMT

நிகழும் மங்களகரமான குரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ருது சித்திரை மாதம் 18-ம் நாள் (01.05.2024) அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும், புதன்கிழமையும், திருவோண சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

கும்பம் சனி பகவானை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! நீங்கள் உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைபவர்கள். இந்த பெயர்ச்சியில் குரு பகவான் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானம் - தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

இந்தப் பெயர்ச்சியில் குருபகவான் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்திற்கு வருகிறார். இந்த சமயத்தில் அவரது விசேஷப் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே எட்டு, பத்து, பன்னிரண்டாம் இடங்களில் பதிகின்றன. இதன் காரணமாக உங்கள் உடல்நலம் சீராகும், தொழிலமைப்பு ஏற்றம் பெறும். பணவரவு இருந்தாலும் செலவுகள் சேர்ந்து வரும். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். சிலருக்கு தொழில் நிரந்தரமாகி மகிழ்ச்சி சேர்க்கும். பல கால எதிர்பார்ப்புகளான ஊதியம், பதவி உயர்வு கிட்டும். உடனிருப்போருடன் வீண் தர்க்கம் வேண்டாம். திட்டமிடலும் நேரம் தவறாமையும் உயர்வுகளை உறுதியாக்கும். வரவில் இருந்த தடைகள் நீங்கும். இல்லத்தில் விட்டுக்கொடுத்தல் முக்கியம். விடியல் வெளிச்சம் வரும்போது அதை வார்த்தைகளால் விரட்டிவிட வேண்டாம். உறவுகளால் சகாயம் உண்டு. வாழ்க்கைத் துணை உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபரை அனுமதிக்க வேண்டாம். குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்கள். வரவை திட்டமிட்டுச் செலவிடுங்கள்.

தொழிலில் மேன்மையும் வளர்ச்சியும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது. ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை படியுங்கள். அரசியலில் உள்ளவர்கள் அடக்கத்துடன் இருப்பதே நல்லது. மேலிடத்துக்கு எதிரானவர்கள் நட்பு கனவிலும் வேண்டாம். அரசுப்பணி புரிபவர்கள் தொடர்ச்சியாக வளர்ச்சி பெறுவீர்கள். சட்டப்புறம்பு சகவாசம் சங்கடம் தரும் உடனே உதறுங்கள். பெண்களுக்கு பூர்வீக சொத்து சேரும். மகப்பேறு அமைய முறையான சிகிச்சைகள் உதவும். மாணவர்கள் மறதியை உடனே விரட்டுங்கள். கலைஞர்கள், சினிமாத்துறையினர் கவனத்தை ஒருநிலைப்படுத்துங்கள். வீண் ரோஷம் தவிருங்கள். வாகனத்தில் பழுதிருப்பின் உடனே கவனியுங்கள். ஒற்றைத் தலைவலி, சுவாசக் கோளாறுகள், அடிவயிறு உபாதை, ரத்த அழுத்த மாற்றம் வரலாம். சிவன்-பார்வதி, பெருமாள்-தாயார் வழிபாடு சீரான நன்மை தரும்.


நட்சத்திர பலன்கள்

அவிட்டம் - 3, 4 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் நீங்கள் செய்த வேலைகளை மற்றவர்கள் செய்ததாகக் கூறி நற்பெயர் எடுத்துக் கொள்வார்கள். கவனம் தேவை. வியாபாரிகள் லாபம் ஈட்டுவதில் கவனம் செலுத்துவர். உடனிருப்பவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு கவனமுடன் செயல்படுவது நன்மை தரும். வியாபாரம் தொடர்பான அலைச்சல் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் லாபம் அடைவீர்கள். லாபத்திற்காக காத்திருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடையும்படியான விற்பனை இருக்கும். உடனிருப்பவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் திருப்தி உண்டாகும். பிள்ளைகளின் கல்வியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சதயம்:

இந்த குரு பெயர்ச்சியால் எந்த காரியத்திலும் கவனம் தேவை. பெரியவர்களிடம் நற்பெயர் எடுத்து மகிழ்ச்சி காண்பீர்கள். மனம் தெளிவடையும். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.

பூரட்டாதி - 1, 2, 3 பாதங்கள்:

இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். பிள்ளைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து சந்தோஷம் காண்பீர்கள். இடம், வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான காரியங்களையும் செய்ய ஆரம்பிப்பீர்கள். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று பலனடைவீர்கள். வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.

Tags:    

Similar News