History of Bogi Festival- போகிப்பண்டிகை குறித்த சுவாரசியமான வரலாறை படிச்சு பாருங்க... ஆச்சரியப்படுவீங்க!
History of Bogi Festival- வீட்டில் உள்ள பழையவற்றை மட்டுமல்ல, மனதில் உள்ள தேவையற்ற பழைய எண்ணங்களை அகற்றுவதும்தான் போகி பண்டிகை உணர்த்தும் முக்கிய தத்துவங்களில் ஒன்றாக இருக்கிறது.;
History of Bogi Festival- போகி பண்டிகையின் சிறப்புகளை அதன் வரலாறு சொல்கிறது. (கோப்பு படம்)
History of Bogi Festival- பழையன கழிதலும், புதியன புகுதலுமாய் கொண்டாடப்படும் போகி பண்டிகையின் சிறப்புகள் நிறைந்த வரலாறு இங்கே உங்களுக்காக தரப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு மார்கழி மற்றும் தை வந்தாலே கொண்டாட்டங்களுக்குப் பஞ்சம் இல்லை. மார்கழி 30 நாளும் அதிகாலையில் எழுந்து கோவிலுக்குச் செல்வார்கள். குளிர்காற்றாக இருந்தாலும் இந்த மாதத்தில் சுத்தமான ஆக்ஸிஜனை நாம் பெற முடிகிறது. இவ்வாறு 30 நாள்களும் பழங்காலம் முதல் ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகவே இருந்து வருகிறது. இந்த மாதம் முடிவடையும் நேரத்தில் தான் தைத்திருநாள்களுக்கான முதல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம் பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளும், மார்கழியின் இறுதி நாள் தான் தமிழர்களால் போகிப்பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
போகிப்பண்டிகையின் வரலாறு:
இன்பத்தைக் குறிக்கும் சொல் தான் போகி.. இதுவரை எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அதை அனைத்தையுமே மறந்து மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை முன்னிறுத்தும் பண்டிகையாக போகி விளங்குகிறது. தைத்திருநாள் என்பது உழவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாள் தான்.அதே சமயம் இவற்றை எப்போதும் செழிப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றால் மழை அவசியமான ஒன்று. உழவர்களுக்கு விவசாயம் செய்கின்ற நேரத்தில் மழையைத் தருகின்ற இந்திர பகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் நாளாகப் பார்க்கப்படுவதாக சில வரலாறுகள் கூறுகின்றனர்.
மேலும் இதுவரை கடந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும் மறந்து தமிழர்களின் புத்தாண்டு தினமாக தை மாதத்தில் புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பார்கள். இதோடு போகிப் பண்டிகையன்று விடியற்காலையில் எழுந்து நீராடிவிட்டு, வீட்டில் இருக்கக்கூடிய பழைய பொருள்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துவார்கள். முன்பெல்லாம் பழைய பொருள்களையெல்லாம் ஒன்று திரட்டி எரிப்பதோடு, மோளம் கொட்டி உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். இந்த உற்சாகமே மனதில் எந்த கஷ்டங்கள் இருந்தாலும் அனைத்துமே தூக்கி எரிய செய்துவிடும்.
வீட்டில் உள்ள பழைய பொருள்களை மட்டுமில்லாமல் மனதில் உள்ள தீய எண்ணங்களையும் தூக்கி எறிய வேண்டும் என் நம் முன்னோர்கள் சொல்லும் கதையும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிற்கு வண்ணமடித்து, மண் வீடுகளுக்கு சாணம் போட்டு மொழுகுவார்கள். பழைய பொருள்கயையெல்லாம் எரித்துவிட்ட பின்னதாக வீட்டிற்குத் தேவையான பதிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள்.
தைத்திருநாள் மட்டுமில்லாது போகி பண்டிகையன்றும் சில இடங்களில் பொங்கல் வைப்பதும் வழக்கம். மேலும் இனிப்பு,வடை, பாயாசம் போன்றவற்றையும் தங்களுடைய நிலத்தில் விளைந்த சிறுதானியங்களையும் சமைத்துப் படையலிடுவார்கள். பொங்கல் பண்டிகையில் எப்படி சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கிறோமோ? அதுப்போன்று தான் இந்த போகிப்பண்டிகையில் நிலத்திற்கு நன்மைப் பயக்கும் மழைக்கு நன்றி தெரிவிக்கின்றனர் மக்கள். இதோடு தங்களுடைய நிலங்கள் மற்றும் வீடுகளில் அம்மங்காப்பு செடிகளை வைப்பதும் வழக்கம்
மார்கழி மாதத்தின் கடைசி நாளான போகி பண்டிகைக்கு முந்தைய நாளே வீடு முழுவதும் தூசுகள் இல்லாமல் சுத்தமாக துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் மறுநாள் போகி பண்டிகையின் பொழுது தேவையற்ற பொருட்களை மட்டுமல்லாமல், நம் மனதில் இருக்கும் தேவையற்ற கெட்ட விஷயங்களையும் எரித்து சிறப்பாக, மனமார, புத்துணர்ச்சியோடு கொண்டாட முடியும். இப்படி சுத்தம் செய்யும் பொழுது வீட்டில் இருக்கும் தேவையற்ற குப்பைகளை அகற்ற வேண்டும்.
ஆனால் இன்று நம் வீட்டில் தேவை இல்லாத குப்பைகள் என்றால் அது பிளாஸ்டிக் பொருட்களாக தான் பெரும்பாலும் இருக்கும். இந்த பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது உங்களுக்கும் நல்லதல்ல, இந்த நாட்டுக்கும் நல்லதல்ல காற்று மாசு என்பது இன்று மிகப்பெரும் பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எனவே இவ்வருடம் காற்று மாசுவை தடுக்க தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை குப்பையில் போட்டு விடுங்கள், எரிக்க வேண்டாம்.
அதற்கு பதிலாக காற்று மாசுவை தடுக்கும் வகையிலான பொருட்கள் ஏதாவது இருந்தால் அதனை மட்டும் தனியாக எடுத்து வைத்து போகி பண்டிகையின் பொழுது அதனை எரித்து, சிறு பறை அடித்து பொங்கல் பண்டிகையை வரவேற்கலாம்.
போகம் என்றால் இன்பம், மகிழ்ச்சி என்கிற பொருள்படுகிறது. போகம் என்கிற சொல்லுக்கு அதிபதியாக விளங்குபவர் இந்திர பகவான். விவசாயிகளுக்கு மழையைப் பொழியும் இந்திர பகவானை சிறப்பிக்கும் விழாவாக போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. தான் மழை பொழிவதால் மட்டுமே விவசாயம் செழிக்கிறது என்கிற கர்வம் கொண்ட இந்திரனின் ஆணவத்தை அடக்க கோகுல கிருஷ்ணன் இந்திர வழிபாட்டை தடை செய்து, கோவர்த்தன மலைக்கு வழிபாடுகள் செய்ய மக்களை திசை திருப்பினார். இதனால் கோபமுற்ற இந்திரன் தொடர்ந்து ஏழு நாட்கள் விடாது பெருமழை பொழிய செய்து மக்களைத் துன்புறுத்தினான்.
மக்களைக் காக்க கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக ஒற்றை விரலால் உயர்த்திப் பிடித்து இந்திரனின் கர்வத்தை அடக்கினார். ஆணவத்தை துறந்த இந்திரன் கிருஷ்ணரை பணியவே கிருஷ்ணர் போகி பண்டிகை அன்று இந்திர விழாவாகக் கொண்டாட வரமளித்தார். இந்திரன் மட்டுமல்லாது சுக்கிர பகவானும் போகத்திற்கு அதிபதியாக விளங்குகிறார். சுக போக வாழ்க்கை பெற சுக்ர அருள் நமக்கு தேவை.
ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பொழுது அவன் பணக்காரனாக இருக்கிறான். தேவையற்ற, வீணான, கழிந்த, முதிய மற்றும் பழைய ஆகிய சொற்களுக்கு காரகத்துவம் பெற்றுள்ளவர் சனீஸ்வர பகவான். தீயனவற்றை எரித்து, உழைப்பின் பலனாக நல்லனவற்றை தரித்து சனி பகவான் அருளை பெற்றுக் கொண்டு, விடியும் விடியல் புதுப்பொலிவுடன், புதிய பொருட்களுடன், புதிய இல்லம், புதிய வண்டி, வாகனம் என்று புத்தாடைகள் தரித்து, புதிய பானையில் இனிப்பான சர்க்கரை பொங்கல் படைத்து சுக்கிர பகவானின் அருளையும் பெற்றுக் கொண்டு இருண்டு போன பழைய பொருட்கள் மற்றும் பழைய பிரச்சனைகளை தூக்கி எறிந்து விட்டு வெளிச்சத்தை நோக்கிய புதிய சூரியனைக் காண வழிபடுவதே போகி மற்றும் பொங்கல் பண்டிகையின் தார்மீக காரணங்களாகும். இவ்வழியே இவ்வருடம் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவோம், அனைவருடனும் இணைந்து மகிழ்வோம்.
நீங்களும் இந்த போகிப்பண்டிகையில் தீயவற்றை மறந்து புதிய விஷயங்களோடு உங்களது பொங்கலைக் கொண்டாடுங்க!