இந்திய எம்.பி.,க்கள் ரயிலில் ஓசி பயணம்: 5 ஆண்டில் 62 கோடி அரசுக்கு தண்டச்செலவு..!

இந்தியாவில் மாஜி மற்றும் தற்போதைய லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டு ரயில் பயணத்திற்காக 62 கோடி ரூபாய் தண்டச்செலவு மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-07-01 06:28 GMT

லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மற்றும் அவரது மனைவியர், ரயில்களில் பயணம் செய்ய மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. அதன்படி, இவர்கள் முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டிகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இதேபோல, முன்னாள் எம்.பி.,க்கள் முதல் வகுப்பு 'ஏசி' பெட்டியில் தனியாகவும், இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் துணையுடனும் பயணிக்க சலுகை உண்டு.

இந்நிலையில், முன்னாள் மற்றும் இந்நாள் லோக்சபா எம்.பி.,க்கள் கடந்த ஐந்து ஆண்டு ரயில் பயணத்துக்கு அரசுக்கு ஏற்பட்ட செலவு விவரம் கேட்டு, மத்திய பிரதேசம், சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு லோக்சபா செயலகம் அளித்த பதிலில், கடந்த 2017 - 22 வரையிலான காலகட்டத்தில் முன்னாள் எம்.பி.,க்களின் ரயில் பயணத்துக்கு 26.82 கோடி ரூபாயும், இந்நாள் எம்.பி.,க்களின் பயணத்துக்கு 35.21 கோடி ரூபாயும் செலவிடப்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

சீனாவில் துவங்கி இந்தியாவிலும் பரவிய கொரோனா தொற்று காலம், 2020 - 21ல் மட்டும், முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.,க்களின் ரயில் பயணத்துக்கு 2.47 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து, குறைந்தபட்சம் மத்திய அரசுக்கு வீண் செலவை குறைக்கும் வகையில், முதற்கட்டமாக, முன்னாள் எம்.பிக்கள், அவரது மனைவியருக்கு ரயிலில் ஓசி பயண சலுகையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. 

Tags:    

Similar News