நுபுர்சர்மாவுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பா? காவல்துறையை விளாசி தள்ளிய நீதிபதிகள்..!

சர்ச்சை பேச்சு விவகாரத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டதா? என டெல்லி காவல்துறையையும், விளம்பரத்துக்காக பேசியதாக நுபுர்சர்மாவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கோபத்துடன் விளாசித் தள்ளினர்.

Update: 2022-07-01 13:55 GMT

முகம்மது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட பேச்சாளர் நுபுர்சர்மா.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நுபுர்சர்மா தெரிவித்த கருத்து நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர்சர்மா மீது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புகார்கள் செய்யப்பட்டது. இதையடுத்து இதன்பேரில் காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, விளம்பரத்துக்காக பேசியுள்ளதாகவும், காவல்துறையினர் ஏன் அவரை கைது செய்யவில்லை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனரா எனவும் சரமாரியாக கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் அந்த கண்டனத்தில் நீதிபதிகள் கோபமாகவும் சரமாரியாகவும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். நுபுர் சர்மாவுக்கு எதிராக பதிவான புகார்களின் மீது டெல்லி காவல்துறை இதுவரை என்ன செய்திருக்கிறது? இந்த விவகாரத்தில் நுபுர்சர்மா நடந்து கொண்ட விதம், அதன் பிறகு அவருக்காக அவரது வழக்கறிஞர்கள் செய்த வாதம் அனைத்துமே வெட்கக்கேடானது.

நுபுர் சர்மா தம்முடைய கருத்துகளை வாபஸ் பெற்றது என்பது காலம்தாழ்த்திய செயல். மேலும் நுபுர் சர்மா தமது உயிருக்கு ஆபத்து என்கிறார். அவரால்தான் இந்த ஒட்டுமொத்த நாட்டுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நுபுர் சர்மா போன்றவர்கள் ஒருவித செயல்திட்டத்துக்காகவே பேசுகின்றனர். இப்படி பேசுவதன் மூலம் விளம்பரம் தேடுகின்றனர் எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, நுபுர் சர்மா மீது இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவே? நுபுர் சர்மாவை டெல்லி காவல்துறையினர் ஏன் கைது செய்யவில்லை? விசாரணைக்குப் போன நுபுர் சர்மாவுக்கு சிவப்பு கம்பள மரியாதை கிடைத்ததா? அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எப்படி சரியாகும்? இது ஜனநாயக நாடுதான்.புல் வளர்வதற்கும் உரிமை இருக்கு. அதே புல்லை கழுதை மேய்வதற்கும் கூட உரிமை இருக்கிறது என குறிப்பிட்டனர்.

மேலும், தாம் பேசியதால் ஏற்படும் எதிர்விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காமல் பேசியிருக்கிறார் நுபுர் சர்மா எனவும், எனவே அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்றக்கோரும் நுபுர் சர்மா மனு நிராகரிக்கப்படுவதாகவும், மேலும் எந்தவொரு பரிகாரத்தையும் தேட உயர்நீதிமன்றத்தையே அவர் அணுக வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

Similar News