புல்டோசரில் மாப்பிள்ளை ஊர்வலம்: ஓட்டுனருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு..!

திருமண நிகழ்ச்சிக்கு புல்டோசர் வாகனத்தில் ஊர்வலம் வர மாப்பிள்ளைக்கு உதவியதாக, புல்டோசர் ஓட்டுனருக்கு காவல்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

Update: 2022-06-24 12:02 GMT

மத்தியப்பிரதேசத்தில் புல்டோசர் மீது அமர்ந்து ஊர்வலம் வந்த மாப்பிள்ளை.

மத்தியபிரதேச மாநிலம், பீடல் மாவட்டம் ஜல்லார் கிராமத்தில் சிவில் இன்ஜினியருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், இன்ஜினியர் மணமகன் அன்குஷ் ஜெய்ஷ்வால், ஊர்வலமாக புல்டோசரில் உட்கார்ந்து திருமண மண்டபத்திற்கு வந்தார்.

மாப்பிள்ளையுடன் அவரது குடும்ப உறுப்பினர்களான இரு பெண்களும் அந்த புல்டோசரிலேயே வந்துள்ளனர். அந்த புல்டோசரை ஓட்டுனர் ரவி பாஸ்கர் என்பவர் ஓட்டி வந்தார். இந்த புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. புல்டோசர் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கே பயன்படுத்தப்படும் என்றும் அதில் மக்களை சவாரி ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை எனவும் சட்டம் உள்ளது.

இதனை மணமகன் தரப்புக்கு தெரிவித்த காவல்துறையினர், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் புல்டோசர் ஓட்டுனர் ரவி மீது வழக்குப்பதிவு செய்து, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து மணமகன் கூறுகையில், எனது திருமண நிகழ்வை வித்தியாசமாக நடத்த விரும்பியே புல்டோசரில் ஊர்வலம் வந்தேன். ஆனால், காவல்துறை நடவடிக்கை அதனை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றி விட்டது என நகைச்சுவையாக தெரிவித்தார்.

Tags:    

Similar News