திருச்சி சுந்தர் நகரில் மழை பெய்தால் போதும் சாலையில் அருவி தான்...
திருச்சி சுந்தர் நகர் பகுதியில் மழை நீர் வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் சாலையோரம் அருவி போல் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி மாநகராட்சி 38-வது வார்டில் உள்ளது கே.கே. நகர், எல். ஐ. சி. காலனி, சுந்தர் நகர், ரங்கா நகர் ,ஐயப்பன் நகர் பகுதிகள். திருச்சி மன்னார்புரம் நால் ரோட்டில் இருந்து கே. சாத்தனூர் வரை செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், மருந்து கடைகள், மளிகை கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், மின்சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஜவுளிக்கடைகள், ஸ்வீட் கடைகள் என ஏராளமாக உள்ளன.
இந்த மெயின் சாலையில் எல்.ஐ.சி. காலனியில் இருந்து மன்னார்புரம் நால்ரோடு வரை சாலையின் இடது புறம் அறிவிக்கப்படாத வாய்க்காலாக மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காணமுடிகிறது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தால் போதும் தண்ணீர் சாலையின் இடதுபுறம் அருவி போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதன்காரணமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள், பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொது மக்கள் அன்றாடம் தொல்லைகளை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு காரணம் இந்த சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாதது தான். சுமார் இரண்டு கிலோமீட்டர் நீளத்திற்கு தண்ணீர் இப்படி பள்ளத்தை நோக்கி பெருக்கெடுத்து ஓடுவது ஒவ்வொரு மழைக் காலமும் இங்குள்ள மக்களுக்கு தீராத தொல்லையை தருகிறது.
தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் எத்தனை முறை தார்சாலை போட்டாலும் அவை அரித்துக் கொண்டு சென்று விடுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது கே.கே. நகர் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை ஆகும். அதனை நிறைவேற்ற மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu