திருச்சி கே.கே.நகர் பகுதியில் சாலைகளை ஆக்கிரமிக்கும் மாடுகளால் ஆபத்து
திருச்சி கே. கே. நகர், காஜாமலை மெயின்ரோடு பகுதிகளில் மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை பெய்து எங்கும் தண்ணீரும், மழை நீரும் சேறும் சகதியுமாக தேங்கி நிற்பதால் மாடுகள் உஷ்ணம் தேடி சாலையில் வந்து படுப்பது வாடிக்கையாகி வருகிறது.
திருச்சி கே .கே. நகர் பஸ் டெர்மினல் எல். ஐ. சி .காலனி, ராஜாராம் சாலை பகுதிகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து சாலையில் நிற்கின்றன. மறியல் செய்வது போல் சாலையில் படுத்து உறங்குகின்றன. இதனால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இரவு நேரங்களில் இப்படி ஆக்கிரமிக்கும் மாடுகளால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அவற்றின்மீது வாகனத்தை ஏற்றி தடுமாறி கீழே விழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
கால்நடைச் செல்வங்கள் நமது நாட்டுக்கு தேவையான ஒன்றுதான். கிராமங்களில் அவற்றை எப்படி வேண்டுமானாலும் வளர்க்கலாம் .ஆனால் நகர்ப்புறங்களில் அதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற்றை தங்களது வீட்டிலேயோ அல்லது தோட்டத்திலேயே தனியாக இடம் ஒதுக்கி அவற்றிற்கான தீனிகளை வாங்கிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் அதனையும் மீறி சாலைகளில் மாடுகள் நடமாடுவதால் உயிர்பலி வாங்கும் விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது .
இந்த பிரச்சினையில் இருந்து மக்களை பாதுகாக்க மாடுகளை சாலையில் நடக்க விடாமல் தடுப்பதோடு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu