இன்றே தொடங்கியது அரசு போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம்

இன்றே தொடங்கியது அரசு போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சியில் ஒரு பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு பேருந்துகள் (கோப்பு காட்சி)

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று மாலையே துவங்கி உள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களின் 8 ஆண்டு கால கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கின்றன. நாளை முதல் பேருந்துகள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று மாலை முதல் பேருந்து இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக சென்னை உள்பட சில நகரங்களில் இன்று மாலையே போராட்டம் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1.30 லட்சம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. ஆனால் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை.

மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை. இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த அறிவிப்பையடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக இன்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறையினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இது தோல்வியில் முடிந்திருக்கிறது. எனவே வேலை நிறுத்த போராட்டத்தை உறுதியாக தொடர்வோம் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலை முதல் பேருந்து இயக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

சென்னை திருவான்மியூர் பேருந்து முனையத்தில் பேசிய தொழிற்சங்கத்தினர், "பேருந்து இயக்கம் படிப்படியாக குறையும். மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக முடிந்தவரை முயன்று வருகிறோம்" என்று கூறியுள்ளனர். அதேபோல திருச்சி பேருந்து முனையத்திலும் தொழிற்சங்கத்தினர் பேருந்துகளை பணிமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதே வேலை நிறுத்தம் தொடங்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே, தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளனர்.

தொ.மு.ச. தொழிற்சங்கத்தினர் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்களை கொண்டு பஸ்களை இயக்க தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது. எனவே அவர்கள் முழு அளவில் பஸ்களை இயக்க உள்ளனர். ஆனால் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி. போன்ற கம்யூனிஸ்டு தொழிற்சங்கங்களும் அ.தி.மு.க. தொழிற்சங்கத்துடன் போராட்டத்தில் குதித்து இருப்பதால் வேலை நிறுத்த போராட்டம் தீவிரமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story