சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அதிமுக நிா்வாகிகள்

சேலம் : மாணவர்களால் பாலியல் தொல்லைக்குள்ளான மாணவி விவகாரத்தில், சமரச பேச்சுவார்த்தை நடத்திய பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் அதிமுகவினர் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் நடந்த சம்பவம்
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவிக்கு, அதே பள்ளியில் படித்து வந்த பிளஸ் 1 மாணவர்கள் 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், வழக்குப் பதிவு செய்த ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீஸார், மூன்று மாணவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
தகவலை மறைத்த பள்ளி நிர்வாகம்
இந்நிலையில், இந்த சம்பவத்தில் முழு தகவலையும் மறைத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் முத்துராமன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், பானுப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சமரச பேச்சுவார்த்தை நடத்திய திமுகவினர்
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க பள்ளி மேலாண்மை குழுத் தலைவரான திமுகவை சேர்ந்த ஜோதி என்பவர் பேரம்பேசி சமரச பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
அதிமுகவினர் அளித்த புகார் மனு
இதையடுத்து, ஜோதி உள்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு பாதுகாப்பும், நீதியும் பெற்றுத்தர வேண்டும் என அதிமுக சேலம் புகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மணி, ராஜமுத்து, சித்ரா, ஜெய்சங்கரன், நல்லதம்பி, நிர்வாகிகள் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி, காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu