பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்.

முறைகேடு வழக்கில் கைதான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

முறைகேடு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ள ஜெகநாதன், பூட்டர் பவுண்டேஷன் (பெரியார் யூனிவர்சிட்டி டெக்னாலஜி எண்டர்புரூனர்சிப் அண்ட் ரிசர்ச் பவுண்டேசன்- PUTER) என்ற நிறுவனத்தை தொடங்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றக்கூடிய ஆசிரியர்களையே பயன்படுத்தி தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ததாக புகார் எழுந்தது.

அரசின் அனுமதி பெறாமலேயே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் ஒன்றை தொடங்கி, அரசு சம்பளம் பெறும் பல்கலைக்கழக பணியாளர்களை அதில் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் சேலம் கருப்பூர் காவல்துறையினர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இருந்த துணை வேந்தர் ஜெகநாதனை நேற்று கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட துணைவேந்தர் ஜெகநாதனை, மாஜிஸ்திரேட் தினேஷ் குமார் நிபந்தனை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.

ஜெகநாதன், 7 நாட்கள் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறையின் அனுமதியின்றி வெளியூருக்கு செல்லக்கூடாது என்றும், காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, அலுவலகம் உள்பட 7 இடங்களில் காவல்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள துணைவேந்தர் அறை, அவரது இல்லம், விருந்தினர் விடுதி, பதிவாளர் அலுவலகம், பதிவாளர் இல்லம் மற்றும் சூரமங்கலம் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.

Tags

Next Story