மத்திய அரசு மானிய விலையில் வழங்கும் யூரியாவை கடத்தி பதுக்கியவர் கைது

ஈரோடு : மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வேளாண் பணிக்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் யூரியா வழங்கி வருகிறது. இந்த உரத்தை கடத்தி கூடுதல் விலையில் விற்பனை செய்து வருவதாக ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சோதனையில் பதுக்கிய யூரியா பறிமுதல்
இதையடுத்து, அப்பிரிவு டிஎஸ்பி வடிவேல் தலைமையில் ஆய்வாளா் சுதா, உதவி ஆய்வாளா்கள் மேனகா, ஆறுமுகநயினாா், பெருமாள், சதீஷ்குமாா் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலா்கள் ஈரோடு மாவட்டம், பேரோடு அருகே பி.மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கிடங்கில் சோதனை நடத்தினா்.
அங்கு, மத்திய அரசால் வழங்கப்படும் யூரியா மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. யூரியாவை பதுக்கி வைத்ததாக பவானியைச் சோ்ந்த முகமது அலி (54) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், மானிய விலையில் வழங்கப்படும் யூரியாவை கடத்தி வந்து பதுக்கிவைப்பதற்காக கிடங்கை வாடகைக்கு எடுத்ததும், யூரியாவை வேறு மூட்டையில் அடைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
கிடங்கில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 93.22 டன் யூரியாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். முகமது அலி கொடுத்த தகவலின்பேரில் வேறு இடத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 91.8 டன் யூரியா மற்றும் 3 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மொத்தம் 185 டன் யூரியா, 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu