"தந்தை பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டை வீசுவேன் "என கொலை மிரட்டல்: பிப்.20-ல் ஈரோடு போலீசில் சீமான் ஆஜராக சம்மன்!
![தந்தை பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டை வீசுவேன் என கொலை மிரட்டல்: பிப்.20-ல் ஈரோடு போலீசில் சீமான் ஆஜராக சம்மன்! தந்தை பெரியார் தொண்டர்கள் மீது வெடிகுண்டை வீசுவேன் என கொலை மிரட்டல்: பிப்.20-ல் ஈரோடு போலீசில் சீமான் ஆஜராக சம்மன்!](https://www.nativenews.in/h-upload/2025/02/17/1977615-zzg-1739774848.webp)
ஈரோடு : தந்தை பெரியார் தொண்டர்கள் மீது பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து பேசியதற்காக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஈரோடு போலீசார் முன்பு வரும் 20-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசியது தொடர்பாக புகார்களின் அடிப்படையில் வடலூர் மற்றும் ராணிப்பேட்டை போலீசார் சீமான் வீடு மற்றும் கட்சி தலைமை அலுவலகங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த சில மாதங்களாக தந்தை பெரியார் குறித்து இழிவாகவும் அவதூறாகவும் பேசினார். ஆதாரமற்ற வகையில் சீமான் பேசியதற்கு எதிராக பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் சென்னையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதி உச்சமாக தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசினார் சீமான். பெரியார் பிறந்த மண்ணில் நின்றுதான் விமர்சிக்கிறேன் என்ன செய்துவிட முடியும் என்று கேள்வி கேட்டார் சீமான்.
மேலும் பிரபாகரனிடன் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள்.. நீங்கள் வைத்திருப்பது வெறும் பெரியார் எனும் வெங்காயம்.. என் தலைவன் பிரபாகரன் கையில் வைத்திருப்பது வெடிகுண்டு.
நீ பெரியாரின் வெங்காயத்தை என் மீது வீசு.. நான் உன் மீது பிரபாகரன் தந்த வெடிகுண்டை வீசுகிறேன்.. என்ன நடக்கிறது என பார்.... ஏய்.. வெச்சிருக்கேன்.. இன்னும் வீசவில்லை.. வெடிகுண்டுகளை வீசினேன் என்றால் என்ன ஆவாய் என பார்த்துக் கொள்.. உன்னை புதைச்ச இடத்தில் புல் கூட முளைக்காது.. Be Carefull.. சேட்டையை வேறு எங்காவது வைத்துக் கொள்..
பெரியார் ஆரிய அடிமை; ஆங்கிலேய அடிமை என சீமான் குற்றச்சாட்டு
திராவிட குப்பைகளை உரமாக்கி தமிழ்த் தேசியத்தை வளர்க்க வந்த பிள்ளைகள் நாங்கள். பெரியார் ஆரிய அடிமை; ஆரிய கூட்டாளி மட்டுமல்ல. ஆங்கிலேய அடிமையனாகவும் வாழ்ந்திருக்கிறார். பெரியார் எந்த மதத்துக்கு எதிரான குறியீடு? என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்து பேசியிருந்தார் சீமான்.
சீமானின் இந்த பகிரங்க கொலை மிரட்டல் பெரியார் தொண்டர்களை கொந்தளிக்க வைத்தது. ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் சீமானுக்கு எதிராக மீண்டும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.அத்துடன், சீமான் மீது பெட்ரோல் குண்டு வீசவும் தயார் என பெரியார் தொண்டர்கள் பதிலடி கொடுத்தனர்.
ஈரோடு போலீசார் சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்று விசாரணை
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள சீமான் வீட்டுக்கு சென்ற ஈரோடு போலீசார், வெடிகுண்டு வீசுவேன் என மிரட்டிய பேச்சு தொடர்பான புகார் மீதான விசாரணைக்கு வரும் 20-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தனர்.
ஏற்கனவே பெரியாரை இழிவுபடுத்தி பேசிய புகார்கள் மீதான விசாரணை தொடர்பாக வடலூர், ராணிப்பேட்டை போலீசார் சீமானின் வீடு, நாம் தமிழர் கட்சி அலுவலகங்களில் சம்மன் கொடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu