கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற ஒப்பந்ததாரர்

கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு டீசல் கேனுடன் வந்த ஒப்பந்ததாரர் நவீனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மாநகராட்சி அலுவலக உலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது, மாமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
மேலும், கோவை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட உள்ள பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கிடையே மாநகராட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிக்கும்போது மாநகராட்சி அலுவலகத்திற்கு டீசல் கேனுடன் ஒருவர் வந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாநகாரட்சி கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒரு தம்பதி கைக்குழந்தையுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு வந்தது. அப்போது அவர்கள் கையில் ஒரு கேனில் டீசல் வைத்து மறைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்த தம்பதி வைத்திருந்த டீசல் கேனை கைப்பற்றினர்.
மேலும், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், கோவை குனியம்புத்தூரை சேர்ந்த நவீன் என்பததும், கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை எடுத்து செய்து வந்த நிலையில் அதற்கான நிலுவைத் தொகையை இதுவரை கொடுக்கவில்லை என்றும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, நவீனை எச்சரித்த போலீஸார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்கும் நோக்கத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் டீசல் கேனுடன் வந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஒப்பந்ததாரர் நவீன் கூறியதாவது:
பலரிடம் கடன் பெற்று கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுத்து பணிகளை மேற்கொண்டு வந்தேன். பணிகளை முடித்த நிலையில் அதற்கான பணத்தை இதுவரை தராமல் இழுத்தடிக்கின்றனர். இதுதொடர்பாக உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டால் அவர் சரியான பதிலை தெரிவிக்க மறுக்கிறார்.
அதிமுகவைச் சேர்ந்தவன் எனக் கூறி எனக்கான பணத்தை தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். கடன் தொல்லை அதிகமானதால் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதாக நவீன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu